Thursday, August 25, 2011

எச்ஐவி கேள்வி பதில் -1

அன்புள்ள வசந்த்,

என் பெயர் ரங்கநாதன்

உங்களின் இந்த முயற்சி நல்லதொரு தொடக்கம். எச்ஐவி பற்றிய விவரங்களை விழிப்புணர்வை பெண் பதிவர் ஒருவர் செய்து கொண்டிருந்தார். அவரை ஏனோ பல நாட்களாக காணவில்லை. சமீபத்தில் நான் என் கையில் பச்சை குத்திக் கொண்டேன். ரோட்டோரத்தில் இருக்கும் ஒருவரிடம் பச்சை குத்தியதால், நண்பர்கள் பலர் என்னை எச்ஐவி நோயின் அபாயத்தை கூறி பயமுறுத்துகின்றனர். பச்சை குத்தும் போது எச்ஐவி பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

என்னை தொடர்பு கொண்டதற்கு நன்றி திரு இரங்கநாதன்.

பச்சைகுத்துவற்கு உபயோகப்படுத்தப்படும் ஊசி/கருவி சுத்தம் செய்யப்படவில்லையென்றால், எச்ஐவி பரவுவதற்கான அபாயம் இருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உபயோகப்படுத்தப்பட்ட ஊசியை/கருவியை சுத்தம் செய்யாமல் அடுத்தவருக்கு உபயோகப்படுத்தினால் எச்ஐவி கிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அதனால் பச்சை குத்துபவர்களாக இருக்கட்டும், மருத்துவர்களாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் நன்றாக சுத்தம் செய்த அல்லது ஒரு முறை மட்டுமே பயன் படுத்தப்படும் ஊசிகளை உபயோகப்படுத்துவது சாலச் சிறந்தது

எச்ஐவி மட்டுமில்லாமல் இரத்தித்தினால் பரவும் மற்ற நோய்கள் பரவும் ஆபத்தும் இருக்கிறது. உங்களை அச்சுறுத்த கூறும் பதில் இல்லை இது. நீங்கள் எதற்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எதுவும் இருக்காது என்பதை நம்புவோம்.

மேலும் விவரங்களுக்கு askhivinfo@gmail.com

Saturday, July 10, 2010

வணக்கம்




வணக்கம் வணக்கம் வணக்கம்


வாழ்க்கையில் கற்றுக் கொண்ட என்னற்ற பாடங்களை பகிர்ந்து கொள்ள ஆசை. உங்களின் ஆதரவு வேண்டி

வசந்த்

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட என்னைப் பற்றிய ஒரு அறிமுகம்

கடந்த 25 ஆண்டுகளாக எய்ட்ஸ் எனும் ஆட்கொல்லி நோய் மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கான தடுப்பூசிகளும், வந்த பின் குணமாக்குவதற்கான மருந்துகளையும் கண்டுபிடிக்க பல ஆராய்ச்சிகள், முயற்சிகள் உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இது வரை எச்ஐவி கிருமியே வெற்றி கொண்டு வருகிறது. இதை எதிர்த்து மனித குலம் நடத்தி வரும் போராட்டங்கள் இது வரை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டு குடும்பம், சொந்த பந்தம், சுய கெளரவம், இன்னும் பலவற்றை இழந்தவர்களில் நானும் ஒருவன். ஆம் நண்பர்களே நானும் எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவன் தான். இதை படித்தவுடன் என்னைப் பற்றி உங்களுக்கு மனதில் தோன்றும் எண்ணத்தை நீங்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். அதை நான் உங்களின் குற்றமாக கருதவில்லை. ஏனென்றால், வாலிப வயதில் இஷ்டம் போல வாழலாம் என்ற மமதையில் திரிந்ததால் வந்த வினை இது. இதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை. முன்பு இல்லாத பக்குவமும், முதிர்ச்சியும் இந்த நோய் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்த கிருமி என் உடம்பில் இருப்பது தெரிய வந்த பின் எல்லோரையும் போலவே நானும் கோபப் பட்டேன், அழுதேன், தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் எப்படியோ மீண்டு வந்து, என்னைப் போல என்னற்ற சகோதர சகோதரிகளைப் பார்த்த பின் துணிந்து வாழ நினைத்தேன். திருமணம் என்ற ஒன்று ஆகாதலால் ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கவில்லை என்ற ஒரு நிம்மதி மட்டும் இப்பொழுது.

இன்று இந்த நோய் நாடெங்கும், உலகெங்கும் பரவி இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கி பலர் பணங்காய்ச்சி மரங்களை வளர்த்து வருகிறார்கள். தொண்டு நிறுவனம் என்ற பணங்காய்ச்சி மரம் மூலமாக காலங்ககாலத்துக்கும் அவர்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்க எங்களைப் போன்ற பாதிக்கப் பட்டவர்களுக்கு நிழல் தருவதாக பொய் பிரச்சாரம் செய்து இன்று பணம் சம்பாதிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எங்களைப் போல நலிந்தவர்கள் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. விளிம்புநிலை மக்களின் நிலைமையை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தொண்டு செய்வதாக படம் காட்டி புகழ் சம்பாதிப்பவர்கள் ஒரு புறம் இருக்க.. தாங்கள் செய்வது வெளியே தெரியாமல் எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் மனித நேயங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எங்களுக்காக செய்து வரும் சில நல்ல காரியங்கள் மகத்தானது. அவர்களைப் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கான இடமாக தமிழ்மணம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த வலைப்பூவை தொடங்குகிறேன். இதன் மூலம் குறைந்தபட்சம் சிலருக்காவது ஒரு விழிப்புணர்வை அளிக்கவே என் இந்த முயற்சி. எனக்கு தெரிந்ததை தெரிந்த தமிழில் எழுதுகிறேன். பொருத்தருள்க.

உங்களின் மேலான ஆதரவை வேண்டி

வசந்த்.

எச்ஐவி பற்றிய சந்தேகங்களை கேட்க


எச்ஐவி பற்றிய கேள்விகளை கேட்க விரும்புகிறவர்கள் இங்கு பின்னூட்டமாக கேட்கலாம் அல்லது askhivinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கேட்பவர்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ரகசியமாக வைக்கப்படும். பதில் தனிப் பதிவாக போடலாம் என்று நினைக்குறோம். இது ஒரு கூட்டு முயற்சி.