Saturday, July 10, 2010

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட என்னைப் பற்றிய ஒரு அறிமுகம்

கடந்த 25 ஆண்டுகளாக எய்ட்ஸ் எனும் ஆட்கொல்லி நோய் மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கான தடுப்பூசிகளும், வந்த பின் குணமாக்குவதற்கான மருந்துகளையும் கண்டுபிடிக்க பல ஆராய்ச்சிகள், முயற்சிகள் உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இது வரை எச்ஐவி கிருமியே வெற்றி கொண்டு வருகிறது. இதை எதிர்த்து மனித குலம் நடத்தி வரும் போராட்டங்கள் இது வரை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டு குடும்பம், சொந்த பந்தம், சுய கெளரவம், இன்னும் பலவற்றை இழந்தவர்களில் நானும் ஒருவன். ஆம் நண்பர்களே நானும் எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவன் தான். இதை படித்தவுடன் என்னைப் பற்றி உங்களுக்கு மனதில் தோன்றும் எண்ணத்தை நீங்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். அதை நான் உங்களின் குற்றமாக கருதவில்லை. ஏனென்றால், வாலிப வயதில் இஷ்டம் போல வாழலாம் என்ற மமதையில் திரிந்ததால் வந்த வினை இது. இதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை. முன்பு இல்லாத பக்குவமும், முதிர்ச்சியும் இந்த நோய் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்த கிருமி என் உடம்பில் இருப்பது தெரிய வந்த பின் எல்லோரையும் போலவே நானும் கோபப் பட்டேன், அழுதேன், தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் எப்படியோ மீண்டு வந்து, என்னைப் போல என்னற்ற சகோதர சகோதரிகளைப் பார்த்த பின் துணிந்து வாழ நினைத்தேன். திருமணம் என்ற ஒன்று ஆகாதலால் ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கவில்லை என்ற ஒரு நிம்மதி மட்டும் இப்பொழுது.

இன்று இந்த நோய் நாடெங்கும், உலகெங்கும் பரவி இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கி பலர் பணங்காய்ச்சி மரங்களை வளர்த்து வருகிறார்கள். தொண்டு நிறுவனம் என்ற பணங்காய்ச்சி மரம் மூலமாக காலங்ககாலத்துக்கும் அவர்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்க எங்களைப் போன்ற பாதிக்கப் பட்டவர்களுக்கு நிழல் தருவதாக பொய் பிரச்சாரம் செய்து இன்று பணம் சம்பாதிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எங்களைப் போல நலிந்தவர்கள் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. விளிம்புநிலை மக்களின் நிலைமையை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தொண்டு செய்வதாக படம் காட்டி புகழ் சம்பாதிப்பவர்கள் ஒரு புறம் இருக்க.. தாங்கள் செய்வது வெளியே தெரியாமல் எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் மனித நேயங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எங்களுக்காக செய்து வரும் சில நல்ல காரியங்கள் மகத்தானது. அவர்களைப் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கான இடமாக தமிழ்மணம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த வலைப்பூவை தொடங்குகிறேன். இதன் மூலம் குறைந்தபட்சம் சிலருக்காவது ஒரு விழிப்புணர்வை அளிக்கவே என் இந்த முயற்சி. எனக்கு தெரிந்ததை தெரிந்த தமிழில் எழுதுகிறேன். பொருத்தருள்க.

உங்களின் மேலான ஆதரவை வேண்டி

வசந்த்.

14 comments:

Unknown said...

உங்கள் தன்னம்பிக்கையும். நேர்மையும் பாராட்டுதலுக்கு உரியது.. ஆறுதல் தேவைபடாத தூரங்களில் இருந்துகொண்டு முடிந்தவரை இந்த சமுதாயத்துக்கு நீங்கள் பணியாற்ற நினைப்பதற்கு என் வந்தனம்..

நீங்கள் அனுமதி தந்தால் என் வலைபக்கத்தில் இந்த வலைபக்கத்தை அறிமுகம் செய்கிறேன்..

உங்கள் மின்னஞ்சலை அனுப்புங்கள்..
krpsenthil@gmail.com

Anonymous said...

பதிவர் மங்கை அவர்களின் மூலமாகவே தங்களின் பதிவை அறிய நேர்ந்தது. உங்களின் முயற்சிகள் பல்கிப் பெருகிட வாழ்த்துக்கள் நண்பரே!

இனி வரும் நாட்களில் எனது பதிவுகளில் தங்களின் வலைத்தளம் பற்றிய குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்....உங்களுடைய முயற்சியில் எனது சிறிய பங்களிப்பாக இதை கருதுகிறேன்.

வாழிய பல்லாண்டு....!

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு தோழர் வசந்த் !
எங்கள் ஆதரவு மட்டுமன்று அன்பும் எப்போதும் உங்களுக்கு உண்டு !
தொடர்ந்து எழுதுங்கள் ,மனம் திறந்து !
நீங்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு எங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாய் அமையும் !
நன்றிகள் தோழர் !மீண்டும் வரவேற்கிறேன் நண்பரே !

அபி அப்பா said...

அன்பு நண்பர் வசந்த்! எங்கள் எல்லோர் ஆதரவும் உங்களுக்கு உண்டு. சண்டை போட மட்டுமேயான தளம் இல்லை இந்த தமிழ்மணம். பல நல்ல விஷயங்கள் நடந்தேறிய இடம் இது. உங்களுக்கு எல்லோருடைய ஆதரவும் நிச்சயம் இங்கு உண்டு. இனி மேல் நீங்களே உணர்வீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்! அன்புடன்
அபிஅப்பா

Ahamed irshad said...

தொடர்ந்து எழுதுங்கள் மனம் தளராமல்..

அன்புடன் நான் said...

உங்க துணிச்சலை வியக்கிறேன் வசந்த்...
உங்க எண்ணம் சிறக்க என் வாழ்த்துக்கள்.....
தொடர்ந்து எழுதுங்க. நன்றி.

tsekar said...

உங்கள் தன்னம்பிகைக்கு வணக்கம் !!!

நீங்களே ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கலாம் -

என்னால் முடிந்த உதவி செய்ய தயாராக இருகீரன் !!!

Any help:rousesekar@gmail.com

-tsekar

வசந்த் said...

எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது...

செந்தில் அவர்களே

தேவைப்படும்போது நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்... சில காரணங்களுக்காக என்னால் இப்பொழுது யாரையும் தொடர்பு கொள்ள முடியாது...

வசந்த் said...

panguvaniham..

Sir/Madam...

மங்கை அக்கா சொல்லியா... அவங்க தான் இந்த பதிவு தொடங்கியதுக்கு காரணம்.. ஆனா அவங்கள காணலை... அவங்க தான் முதல்ல வருவாங்கன்னு எதிர் பார்த்தேன்.. அவங்களுக்கு மடல் அனுப்பியும் பார்த்துட்டேன்..பதில் இல்லை...

நன்றி...

வசந்த் said...

நியோ... அபி அப்பா.. உங்கள் அன்பிற்கு நன்றி...சந்தோஷமா இருக்கு

வசந்த் said...

அஹமது இர்ஷாத், சி. கருணாகரசு s
மற்றும் rouse ..நன்றி.. தேவைப்படும்ப்போது உங்கள் உதவியை நாடுகிறேன்

Mohan said...

தொடர்ந்து எழுதுங்கள். மற்றவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பாராட்டிற்குரியது. வாழ்த்துகள்!

வசந்த் said...

நன்றி மோஹன்...:)

வசந்த் said...

நன்றி மோஹன்...:)